சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில துணை அமைப்பு செயலாளராக திரு.கங்காதுரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பஞ்சாயத்து பொறுப்பாளராக தன் பணியை துவங்கி, தொடர்ந்து ஒன்றிய பொறுப்பு, துணை செயலாளர் என பதவிகளை வகித்து இன்று துணை அமைப்பு செயலாளர் பொறுப்பை ஏற்று கொண்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக நபர்களுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு சேர்த்தவர், வருவாய் துறை சம்பந்த பட்ட பிரச்சினைகளை சரிசெய்ய கூடிய அனுபவம் பெற்றவர், சென்னை தகவல் ஆணையத்திற்கு அதிக முறை இயக்கத்தின் சார்பில் விசாரணை கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தை சிறப்பான முறையில் பயன்படுத்தி உள்ளார். தொடர்ந்து இயக்கத்தின் மாவட்ட அணியை சிறப்பாக வழிநடத்துவார் என நம்பிக்கை இருக்கிறது. வாழ்த்துக்கள் கங்காதுரை

மணிவாசகம், துணைத் தலைவர், 

சட்ட பஞ்சாயத்து இயக்கம். - டிசம்பர் 3 - 2020

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின்  துணைத்தலைவராக பொறியாளர்.திரு.மணிவாசகம் அவர்களும், துணை பொதுச்செயலாளராக வழக்கறிஞர் திரு. கமல் அசோக் அவர்களும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை புதிய வேகத்தில் சிறப்பாக எடுத்து சென்று மக்கள் பணி செய்ய புதிய பொறுப்பாளர்களுக்கு வாழ்த்துக்கள் - November 1 - 2020இயக்கத்தின் நோக்கம் 

திரு சிவா இளங்கோ - நிறுவனர்  

 சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

துவக்க  விழா உரை

திரு செந்தில் ஆறுமுகம் - நிறுவனர்  

சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் நோக்கம் என்ன? 

சட்டத்தின் ஆட்சி என்றால் என்ன? நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா?  விளக்கம் அளிக்கிறார்.

திரு செந்தில் ஆறுமுகம் - நிறுவனர் 

7ஆண்டுகடந்துவந்தபாதை - இயக்க களப்பணிகள்

திரு ஜெய் கணேஷ் - மாநில ஒருங்கிணைப்பாளர்

சட்ட பஞ்சாயத்தின் - செயல்பாடுகள் மற்றும் களப்பணிகள்

திரு ஜாஹிர் ஹுசைன், பொருளாளர்

சட்ட பஞ்சாயத்தின் - செயல்பாடுகள் மற்றும் களப்பணிகள்

திரு சீனிவாசன் - மாநில செயலாளர் 

தண்ணீர் தண்ணீர் - கேள்விக்குறியாகும் தமிழக நீராதாரங்கள்

லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்கவேண்டுமா? 

தகவல் பெறும் உரிமை சட்டம் என்றல் என்ன ?

திரு சிவா இளங்கோ - நிறுவனர்  சட்டப்பஞ்சாயத்து இயக்கம்

கருகும் பயிர்கள், உருகும் உயிர்கள் - விவசாய கருத்தரங்கம்

தென்மேற்கு பருவமழை தான் பொய்த்து போனதென்றால், வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றி 60 சதவீதத்திற்கு மேல் பற்றாக்குறை ஆனது. தினந்தினம் விவசாயிகள் மரணம் மற்றும் தற்கொலை போன்ற செய்திகளை வலியுடன் கடந்துகொண்டிருக்கிறோம். இந்த நிலையில் இப்பிரச்சனை பற்றிய உண்மையான புரிதலையும் அதற்கான தீர்வுகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வண்ணம் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில், கடந்த ஜனவரி 22-ம் தேதி “கருகும் பயிர்கள், உருகும் உயிர்கள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு.ஆறுபாதி கல்யாணம் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தற்போது விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றியும், அதற்கு தனது அனுபவத்தில் அவர் முன்வைக்கும் தீர்வுகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இயக்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என 30க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதுதவிர இந்த கருத்தரங்கம் இணையம் வழியாக இயக்கத்தின் பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை ஆயிரக்கணக்கானோர் இணையத்தில் கண்டு பயனடைந்தனர்.

விவசாயத்தில் உள்ள பிரச்சனைகள், தீர்வுகளை 10 தலைப்புகளின் கீழ் திரு.ஆறுபாதி கல்யாணம் அவர்கள் கருத்தரங்கில் எடுத்துரைத்தார். அவைகள் பின்வருமாறு:

மேலும் விவசாயிகள் பிரச்சனைக்கான தீர்வுகளை சுதந்திர காலத்திலே எடுத்துரைத்த ‘Economy of Permanance’ என்ற ஜே.சி.குமரப்பா எழுதிய புத்தகத்தை அனைவரும் படிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

மாலை சரியாக 4 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வில் முதலில் அறுபாதி கல்யாணம் அவர்கள் தனது கருத்துக்களை எடுத்துவைத்தார். பின்னர், நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் கவனித்துக் கொண்டிருந்த மக்கள் இப்பிரச்சனை சம்பந்தமாக எழுப்பிய கேள்விகளுக்கு விடையளித்தார். திட்டமிட்டபடி சரியாக 6 மணிக்கு நிகழ்வு முடிவடைந்தது. தொடர்ந்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மாதந்தோறும் இம்மாதிரியான கருத்தரங்கங்களை ஏற்பாடு செய்யவுள்ளது என்பதையும் கூறிக்கொள்கிறோம்.

இந்த கருத்தரங்கை இணையத்தில் காண: https://youtu.be/eev4M_j2G9Y

தொகுப்பு: ரங்கபிரசாத்


நாடும் நாடாளுமன்றமும் - பரபர பார்லிமெண்ட் பற்றிய விறுவிறு கருத்தரங்கம்

சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஆராய்ச்சி குழுவினர் சார்பாக இந்திய பாராளுமன்றம் செயல்படும் விதம் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காக சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 31-12-2016 அன்று சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


பொதுவாக பாராளுமன்றம், நாடாளுமன்றம் போன்ற பெயர்களை சமூக அறிவியல் புத்தகத்திலும் பின்னர் செய்திதாள்களிலும் மட்டுமே படித்திருப்போம். ஆனால் பாராளுமன்றத்தில் என்ன நடக்கிறது, அதன் அமைப்பு என்ன, விதிமுறைகள் என்ன, யாரெல்லாம் பங்கேற்பார்கள், ஒவ்வொருவரின் பங்களிப்பு என்ன, ஒருநாள் பாராளுமன்றத்தை நடத்த ஆகும் செலவு என்ன, எப்பொழுதெல்லாம் பாராளுமன்ற நடக்கும் என்ற கேள்விகளை முன்வைத்தால் பலரிடம் விடை இருப்பதில்லை. இவை அனைத்திற்கும் பதிலளிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. காலை 11 மணிக்கு துவங்கிய இந்நிகழ்வில், ஆராய்ச்சிக்குழு திரு.மகேஷ் குமார் மற்றும் திரு.ரங்கா பிரசாத் அவர்கள் பாராளுமன்ற வரலாறு பற்றியும் நிகழ்வுகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

 

பாராளுமன்றத்தில் என்னென்ன வகையான விவாதங்கள் நடைபெறும், Zero hours என்றால் என்ன போன்ற விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பெண் அமைச்சர்கள் ஆண் அமைச்சர்களை விட அதிகமான விவாதங்களில் ஈடுபடுகிறார்கள் போன்ற தகவல்கள், பெண்களின் எண்ணிக்கை பாராளுமன்றத்தில் குறைவாக இருப்பினும் அவர்களது செயல்கள் மற்றும் விவாதங்கள் மேம்பட்டு இருப்பதை காட்டுகிறது. ஒரு நிமிடம் மக்களவை நடத்துவதற்கு ரூ 1.42 லட்சம் செலவாகிறது, கடந்த ஆண்டில் பாராளுமன்ற ஒத்திவைப்பால் மட்டும் நமக்கு ரூ. 120 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது போன்ற தகவல்களும், பாராளுமன்ற உறுப்பினர்களில் 34% (186 பேர்) குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற தகவலும் மிகுந்த வருத்தத்தையும் அதே நேரத்தில் நம்முடைய அறியாமையையும் வெளியே கொண்டு வந்தது. மக்களின் தேவையும் உரிமையும் ஓங்கி ஒலிக்க சரியான தகுதியான நபர்களை அமைச்சரவைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்திலும் கடமையிலும் நாம் உள்ளோம்.


இன்னும் பல சுவையான எளிதில் கிடைக்காத தகவல்கள், அனைவருக்கும் சில காணொளி காட்சிகளுடன் காட்டப்பட்டது. பல செய்திகள் புள்ளிவிவரங்களுடன் பகிரப்பட்டது. இந்த நிகழ்வினை தொகுத்து வழங்கிய திரு.மகேஷ்குமார் மற்றும் திரு.ரங்கபிரசாத், டெல்லியில் நடைபெற்ற "Youth Model parliament"-ல் கேபினட் அமைச்சராக செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை - 07 - 01 - 2017

பத்திரிகை செய்தி

07.01.2017

கடந்த 2014 ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கு, தடை நீக்கம் செய்யக்கோரி தமிழக அரசும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உச்ச நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், மத்திய அரசும் பிஜேபியின் தமிழக தலைவர்களும் சட்டரீதியிலான சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் முந்தைய ஆட்சியாளர்களைக் குற்றம்சாட்டி காலம் கடத்தி வருகின்றனர்.

2006-ல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆரம்பித்த ஜல்லிக்கட்டு பிரச்சினை கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய மாநில அரசுகளின் தவறான சட்ட அணுகுமுறையால் தடைபட்டு கிடக்கின்றது. இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த அனுமதி கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் காளைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுக்களுக்கும் 2006ல் தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. அதே ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்தத் தடை நீக்கப்பட்டாலும், இந்திய விலங்குகள் நல வாரியம் (AWBI – Animal Welfare Board of india) தொடுத்த மேல்முறையீட்டால் 2007ல் உச்சநீதிமன்றம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. பின்னர் அடுத்தடுத்த ஆண்டுகளில் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால அனுமதி கிடைத்தது. இந்த சூழ்நிலையில், 2011ம் ஆண்டில்(11.07.2011) மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தினால்(காங்கிரஸ் ஆட்சியில்) காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்டது. ஏற்கனவே 2009ல் ”தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தின்படி” (Tamilnadu Regulation of Jallikattu act 2009) ஜல்லிக்கட்டுக்கான சட்டப்பூர்வ வடிவம் கொடுக்கப்பட்டிருந்தாலும் , இந்த சட்டத்தை தடைசெய்யக் கோரி பீட்டா (PETA – People for the Ethical Treatment of Animals) எனும் அமைப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்திய விலங்குகள் நலவாரியம்(AWBI) மற்றும் பீட்டா(PETA) ஆகிய இரு தரப்பினரும் தொடர்ந்திருந்த ஜல்லிக்கட்டு தொடர்பான இந்த வழக்குகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தின் மாட்டு வண்டிகள் போட்டிக்கான வழக்குகளுக்கும் ஒரு சேர 07.05.2014ல்

இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், காளைகள் சம்பந்தப்பட்ட அனைத்து விளையாட்டுகளுக்கும் தடை விதித்து தீர்ப்பளித்தது. கூடவே தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம்2009 என்பது தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் என்றாலும், அது மிருகவதை தடை சட்டம் (Prevention of Cruelty to Animals) 1960-ஐ மீறும் வகையில் உள்ளதால், அதனையும் ரத்து செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த சட்ட சிக்கல் காரணமாக 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு(2016) ஜனவரி 8-ல், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அதே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மூலம் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டது. இதனை எதிர்த்து மீண்டும் AWBI மற்றும் பிற விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு இடைக்காலத் தடை பெற்றது.

தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரும் சீராய்வு மனுவையும் கடந்த நவம்பர் மாதம் (2016) தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு உள்ள சட்ட ரீதியிலான தடை இன்னும் நீடிக்கிறது. எனவே, இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தர இருக்கும் தீர்ப்பை ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு, ‘மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஆணையானது உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்படலாம்’ என்ற அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கியின் எச்சரிக்கையையும் மீறி கடைசி தருணத்தில் தவறான முறையில் அவசர ஆணையை வெளியிட்டதால்தான் நீதிமன்றத்தில் அவ்வாணை தடையை சந்தித்தது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் முன்னரே பொங்கல் பண்டிகையும் நெருங்கிவிட்டது என்ற நிலையில் தமிழ் மக்களின் உணர்வு தொடர்பான இந்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்புடன் செயல்பட்டு, சட்டரீதியிலான சரியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது.

நீதிமன்றக் கதவுகளை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு , இதுவரை ‘மிருகவதை தடைச் சட்டத்தில்’ ((Prevention of Cruelty to Animals, 1960) உரிய திருத்தம் கொண்டுவராததற்கு தன் கட்சியினரைத்தான் தமிழக பாஜகவினர் குற்றம் சொல்ல வேண்டும். பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை நாடாளுமன்ற அவைகளில் இதற்கு எந்த முன்முயற்சியும் எடுக்காமல் சாக்குப்போக்கு சொல்லி காலம் கடத்திவரும் பாஜகவினரை சட்ட பஞ்சாயத்து இயக்கம் கண்டிக்கிறது.

காளைகளைக் கொடுமைப்படுத்துதல் என்று சொல்லப்படும் நிகழ்வுகள் ஏதுமின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்பதிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வகுக்கப்பட்டுள்ள பிற விதிமுறைளைப் பின்பற்றி இது நடத்தப்படவேண்டும் என்பதிலும் இருவேறு கருத்திற்கு இடமில்லை. சில விதிமுறைகள் மீறப்படுகிறது என்பதற்காக ஜல்லிக்கட்டையே தடை செய்வது நியாயமில்லை. சாலைகள் போடப்படுவதில், பாலங்கள் கட்டப்படுவதில் முறைகேடுகள், ஊழல் நடப்பது தொடர் செயலாகத்தான் இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதற்காக, சாலைகள்-பாலங்கள் கட்டுவதற்கு ஒட்டுமொத்த தடைவிதித்து விடுவோமா என்ன..? முறைகேடுகள் இன்றி விதிமுறைகளின்படி சாலைகள்-பாலங்கள் கட்டப்படவேண்டும் என்று கோருவதுதானே நியாயமாக இருக்கும். இந்த அணுகுமுறைதான் ஜல்லிக்கட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்பதே இயக்கத்தின் நிலைப்பாடு.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இனியும் நீதிமன்றங்களை கைக்காட்டாமல் ‘மிருகவதைச் தடைச் சட்டம் 1960’ பிரிவு 22 (Restriction on exhibition of performing animals) மற்றும் 28-களில் (Saving as respects manner of killing prescribed by religion) உரிய திருத்தங்களை அவசரச் சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை சட்ட பஞ்சாயத்து இயக்கம் வலியுறுத்துகிறது. இப்படிப்பட்டதொரு அவசரச்சட்டம் இயற்றப்பட்டால்தான் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கான தடை எந்தச் சிக்கலுமின்றி உடைபடும்.

தமிழக கட்சிகளும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிராமல் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டு பிரதமர் மோடியை இந்த அவசர சட்டத்தை கொண்டுவர நிர்பந்திக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். தமிழக இளைஞர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் இப்பிரச்சனையின் பின்னணியில் உள்ள சட்ட நுணுக்கங்களைச் சரியாகப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சிவ.இளங்கோ, தலைவர்

சட்ட பஞ்சாயத்து இயக்கம்ஜல்லிக்கட்டு - சில உண்மைகள்

ஜல்லிக்கட்டு விஷயம் பற்றிய நமது ஆராய்ச்சி அணி தொகுத்த சில உண்மைகளை மக்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

1) “ஜல்லிக்கட்டுத் தடை" - அடிப்படைக் காரணம் என்ன?

2011ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் மிருக வதை தடுப்பு சட்டம் 1960, பிரிவு 22–ன் கீழ் “காளை” மாடுகளை “காட்சிப்படுத்தகூடாத பட்டியலில்” சேர்த்தது. இச்சட்டம் இப்பட்டியலில் உள்ள மிருகங்களை பழக்கப்படுத்தவோ, காட்சிப் பொருளாக பயன்படுத்தவோ தடுக்கின்றது.

2) உச்ச நீதிமன்றம் ஏன் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிட்டது ?

முக்கிய மனுதாரராக இந்திய மிருகங்கள் நல வாரிமும் “பீட்டா”வும் இணைந்து மிருக வதை தடுப்பு சட்டத்தை, ஜல்லிக்கட்டு காளைகளின் விஷயத்தில் அமல்படுத்த உச்ச நீதிமன்றத்தை நாடினர். அதுவே ஜல்லிக்கட்டின் மீதும், காளைகளை வைத்து நடத்தப்படும் பந்தயங்கள், காட்சிகள் மீது 2014ல் உச்ச நீதிமன்றம் தடை விதிக்க காரணமாக அமைந்தது.

3) ஜல்லிக்கட்டு போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கான வழி என்ன?

இப்பிரச்சனையில், நிரந்தர தீர்வை அடைவதற்கான ஒரே வழி, மிருக வதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதுதான். அச்சட்டத்தில், 11, 22, 27, 28 என எந்தப் பிரிவிலும் திருத்தம் செய்து ஜல்லிக்கட்டை மீண்டும் சட்டபூர்வமானதாக்க முடியும். உடனடி தீர்வாக மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை நிறைவேற்றி, அடுத்த கூட்டத்தொடரிலேயே பாராளுமன்றத்தில் அதனை ஒப்புதல் பெற வேண்டும் .

4) வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் வேளையில், மத்திய அரசால் இந்த அவசர சட்டத்தையோ அல்லது, சட்ட திருத்தத்தையோ கொண்டுவர இயலுமா?

முடியும், வழக்கு நிலுவையில் உள்ள நிலையிலும் மத்திய அரசால் மிருக வதை தடுப்பு சட்டத் திருத்தத்தையும், அவசர சட்டத்தையும் கொண்டு வர இயலும்.

5) இந்த சட்டத்திருத்தம், மேற்கொண்டு எந்த சட்ட சிக்கல்களும் எழாமல் தடுக்குமா ?

நீதி மன்றத்தின் கடமையே வகுக்கப்பட்ட சட்டங்களை நிலை நாட்டுவதும், அவற்றை மீறுபவர்களை தண்டிப்பதும் தான். மிருகவதை தடுப்புச் சட்டத்தின் தற்போதைய வடிவம் தெளிவாக ஜல்லிக்கட்டை தடை செய்கிறது. முறையான சட்டத்திருத்தம் செய்யப்படும் பட்சத்தில், நீதி மன்றத்தின் தலையீடு நீர்த்துப்போய், ஜல்லிக்கட்டின் மீதான தடை காலாவதி ஆகிவிடும்

6) இதற்க்கு முன்பு ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளதா, எவ்வாறு அந்த தடை நீக்கப்பட்டது?

2006ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையால் தடை செய்யப்பட்டது. மிருகவதை தடுப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டி, ராமநாதபபுரம் மாவட்டத்தில் மாட்டு வண்டிப் பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கில் தடை விதிக்கப்பட்டது. ஆனால் 2007ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தால் அத்தடை நீக்கப்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு நடத்த பல விதிமுறைகளை வகுத்தது

7) தற்போது ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசால் என்ன செய்ய இயலும்?

2009ம் ஆண்டு தமிழக அரசு “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம்” ஒன்றை கொண்டு வந்தது. 2011ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பரிந்துரையை படி, உச்ச நீதிமன்றம் தனது 2014ம் ஆண்டு தீர்ப்பில் தமிழக அரசின் புதிய சட்டத்தை நீக்கியது. எனவே தற்போது தமிழக அரசு ஜல்லிக்கட்டை நடத்த எதுவும் செய்ய இயலாது.

8) 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த, சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு என்ன ஆனது?

இந்திய மிருகங்கள் நல வாரிம் மற்றும் PETAவின் கோரிக்கையை ஏற்று, உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வரும்வரை அந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்ததுள்ளது

9) ஜல்லிக்கட்டு தடை விவகாரத்தில் இதுவரை நடந்துள்ள சட்ட நிகழ்வுகள்

மார்ச் 2006 - ஜல்லிக்கட்டு மீது மதுரை உயர்நீதி மன்ற கிளை முதல் தடையை விதித்தது

மார்ச் 2007 - சென்னை உயர்நீதிமன்றம் ஜல்லிக்கட்டை முறையாக நடத்திக்கொள்ள விதிமுறைகளுடன் கூடிய அனுமதி அளித்தது

ஜூலை 2009 - தமிழக அரசு “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009” கொண்டு வந்தது

நவம்பர் 2010 - “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009”ன் அடிப்படையில், ஜல்லிக்கட்டை நடத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

ஜூலை 2011 - சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் காளைகளை, காட்சிபடுத்தகூடாத விலங்குகள் பட்டியலிலிருந்து சேர்த்து

மே 2014 - உச்ச நீதிமன்றம் “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 2009”ஐ நீக்கி, ஜல்லிக்கட்டையும் தடை செய்தது

ஜனவரி 2016 - சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை அமைச்சகம் 2011 சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தது

ஜனவரி 2016 - உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2011 சட்ட திருத்தத்தை நிறுத்தி வைத்தது

இறுதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

10) ஜல்லிக்கட்டை தடையை நிரந்தரமாக நீக்க என்ன கோரிக்கை முன் வைக்கப்படவேண்டும்?

மத்திய அரசால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வை கொண்டு வரமுடியும்.** மிருகவதை தடுப்பு சட்டத்தில் அவசர சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, பிப்ரவரி 1ஆம் நாள் தொடங்க உள்ள நிதிநிலைக் கூட்டத்தொடரிலேயே அதை பாராளுமன்றத்தில் அதை இயற்ற கோர வேண்டும்.


 

**தற்போது, பொதுபட்டியலில் உள்ள மிருகவதை சட்டத்தை அரசியல் சாசன பிரிவு 254(2)-ல் குறிப்பிட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, மாநில அரசால் திருத்தம் செய்யப்பட்டுள்ளதும் சரியான முயற்சியே.
உதவி  மையம்  தொடர்பு   7667 100 100

மாநில தலைமை அலுவலகம் :  
 சட்ட பஞ்சாயத்து இயக்கம் ,  H42/3, மேற்கு அவென்யூ, காமராஜர் நகர், திருவான்மியூர்,சென்னை-600041 | sattapanchayat@gmail.com ;   87545-80269 (10am-5pm)
வழித்தடம்:
  • மத்திய கைலாஷ் வழியாக வரும்போது: டைடல் பார்க் சிக்னலுக்கும், ஜெயந்தி சிக்னலுக்கும் இடையில் வலதுபுறத்தில் உள்ளது.
  • அடையாறில் இருந்து வரும்பொழுது ஜெயந்தி சிக்னலில் வலதுபுறம் திரும்பினால், இடதுபுறமுள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ளது.
  • ECR சாலை வழியாக வருபவர்கள், நேராக ஜெயந்தி சிக்னலைக் கடந்தவுடன் இடதுபுறமுள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே உள்ளது.

மேற்கு மண்டல தொடர்பிற்கு(ஈரோடு)  - 8870472176  -                      வடக்கு மண்டல தொடர்பிற்கு(விழுப்புரம்) - 88704-72173தெற்கு மண்டல தொடர்பிற்கு(மதுரை,நெல்லை) - 9894439516      மத்திய மண்டல தொடர்பிற்கு(திருச்சி) - 9943556996